நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லி | BOOSTING IMMUNITY BY EATING AMLA IN TAMIL

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லி

உலகம் முழுவதும் பரவிவரும் கொரொனா வைரஸ் பாதிப்பானது மக்களிடையே உடலின் நோயெதிர்ப்பு சக்தி பற்றிய ஆர்வத்தை அதிகரித்துள்ளது. நோயெதிர்ப்பாற்றல் குறைந்தவர்களையே கொரொனா எளிதாக தாக்குகிறது. இதுவரை கொரொனாவுக்கு மருந்து கண்டு பிடிக்க முடியாத நிலையில், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தால் கொரொனாவை எதிர்கொள்ளவும் தடுக்கவும் முடியும் என்பதே இந்த ஆர்வத்திற்கு காரணம்.

நம் அனைவருக்கும் தெரிந்த, விலை மலிவான மற்றும் எளிதாக கிடைக்கக் கூடிய, நோயெதிர்ப்பு சக்தியை தூண்டும் உணவு நெல்லி ஆகும். நெல்லிக்கனியின் சிறப்பை பழங்காலத்திலேயே உணர்ந்தவர்கள் தமிழர்கள். நெல்லி நம் உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை ஊக்குவித்து நோய்களை தடுக்கும் வல்லமை கொண்டது நோயெதிர்ப்பாற்றலை வலுப்படுத்த முக்கியமாக 6 வழிகளில் நெல்லி பயனளிக்கிறது.


உடலில் கெட்டக் கொழுப்பைக் கரைக்க உதவும் குரோமியம் சத்து நெல்லியில் உள்ளது. கொரொனாவால் பாதிக்கக் கூடிய உறுப்புகளில் இதயமும் ஒன்று தெரியுமா? கெட்டக் கொழுப்பு சேராமல் தடுத்து இதயத்தை பாதுகாக்க ஆரோக்கிய உணவு அவசியமாகிறது. இதற்கு நெல்லி உதவும்.


நெல்லியில் பல்வேறு ஆன்டிஆக்சிடன்ட் சத்துகள் உள்ளன. இவை ரத்தத்தில் உள்ள ஃப்ரீ ரேடிகல் எனப்படும் முடிவுறா மூலக்கூறுகளை நடுநிலையாக்கம் செய்கின்றன. இதனால் பல்வேறு நோய்கள் உருவாவது தடுக்கப்படுகின்றது. நெல்லியின் பாக்டீரிய எதிர்ப்பு தன்மையானது நோய்க் கிருமிகள் வளர்ச்சியை தடுக்கிறது. உடலின் கழிவுகளை நீக்குவதிலும் நெல்லி சிறப்பாக செயல்படுகிறது. மேலும் முகப்பரு, பொடுகு பிரச்சனைகளையும் கூட நெல்லி குறைக்கும்.


சுவாசத் தொற்றை ஏற்படுத்தும் கொரொனாவை எதிர்கொள்ள நம் சுவாச மண்டலத்தை உறுதிப்படுத்துவது அவசியமாகும். நுரையீரல் தொற்றாக மாறக்கூடிய இருமல், சளி போன்ற பாதிப்புகளை குணப்படுத்த நீண்டகாலமாகவே நெல்லி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நெல்லியில் நிறைந்துள்ள வைட்டமின் - சி மற்றும் பிற சத்துகள் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.


இதய நோய்கள், நீரிழிவு நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கும் உடல்பருமனுக்கும் தொடர்புண்டு. உடல் பருமனை சரியான அளவில் பராமரிக்க நெல்லி உதவும். நெல்லியில் உள்ள நார்ச்சத்தானது விரைவாக திருப்தி உணர்வை அளித்து அதிக உணவு உட்கொள்வதைத் தடுக்கிறது. மேலும் சீரணத்தையும் இது எளிதாக்குகின்றது.


உடலின் கழிவுகளையும் நச்சுகளையும் நீக்கி ஆரோக்கியத்தை காக்கும் முதன்மை உறுப்பு கல்லீரல் ஆகும். கொழுப்பு சத்தின் சீரணத்துக்கு உதவும் பித்தநீர், ஒட்டுமொத்த உடல்நலத்துக்கு மிக அவசியமான முக்கிய புரதச் சத்துகள் உள்ளிட்டவற்றை கல்லீரல் உற்பத்தி செய்கின்றது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கல்லீரலின் செயல்பாடுகளை ஊக்குவிப்பதுடன், நச்சுகள் மற்றும் புற்றுநோய் உள்ளிட்டவை தாக்காமலும் தடுக்கின்றது நெல்லி.

Amla

உள்ளூரில் மிக எளிதாக கிடைக்கும் நெல்லியை பல்வேறு வழிகளில் உணவாக உட்கொள்ளலாம். நெல்லி ஜாம், நெல்லி லேகியம், நெல்லிப் பொடி, நெல்லி ஊறுகாய், தேன் நெல்லி இப்படி எண்ணற்ற வகைகளில் நெல்லி கடைகளில் கிடைக்கின்றது. ஆனாலும், நெல்லியின் பயனை முழுமையாகப் பெற இவற்றை வீட்டில் தயாரிப்பதே சிறந்தது.

Amla

இறுதியாக பலமான நோயெதிர்ப்பு ஆற்றலானது, கொரொனா வைரசை எதிர்ப்பதில் உடலில் முதல் நிலை பாதுகாப்பு அரணாக செயல்படுகின்றது. நோயெதிர்ப்பாற்றலை வலுப்படுத்த எளிதான வழி சத்தான உணவுமுறை தான். இதில் நெல்லிக்கு முதன்மை பங்கு உண்டு. ஆகவே , தினசரி நாம் கடைத்தெருவில் பார்க்கும் நெல்லி தானே என்று அலட்சியப்படுத்தாமல், நெல்லியை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் உங்களின் ஆரோக்கியத்துடன் இளமையும் அதிகரிக்கும்.